Showing posts with label முன்னுரை. Show all posts
Showing posts with label முன்னுரை. Show all posts

Sunday, February 21, 2021

கம்பன் கவித்தேன், முன்னுரை

கம்பன் கவித்தேன்’ - முன்னுரை

         கம்பன் கவித்தேன் இத் தலைப்பு எனது பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும், மிகுந்த நட்பிற்கும் உரிய சென்னைத் துறைமுகத் தலைவர் திரு.ப.இரவீந்திரன் IRTS அவர்கள் எங்கள் அலுவலகத்தின் ஒரு நிகழ்விற்கு பரிந்துரைத்த ஒன்று.

           சிறப்பான தலைப்பு. நாம் தேனை எப்படி உண்போம்? தண்ணீர் போல் குடிக்க முடியுமா! உள்ளங்கையில் வைத்து, நாவால் நக்கி ஒவ்வொரு துளியையும் சுவைத்துதானே உண்ணமுடியும். அப்படித்தான் கம்பன் கவியையும், கதை படிப்பது போல் படித்துச் செல்லக்கூடாது. ஒவ்வொரு சொல்லையும் இரசித்துச் செல்ல வேண்டும்.

        தமிழின் மிக அற்புதமான காப்பியம் கம்பராமாயணம். ‘இராமாயண’ கதை அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் கம்பராமாயணத்தின் சிறப்பு, கதையோடு கம்பன் காட்டும் வாழ்வியல் நெறிகள், அறம், அதன் அற்புதமான மொழிவளம்.

    சோழர்கள் காலத்தில் கலை இலக்கியம் சிறந்து, மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர். அதன் காரணமாகவே சிறிது அறம் நழுவி, உலகியல் இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டனர். மக்களையும் மன்னனையும் அறவழிப்படுத்தவே கம்பராமாயணம் இயற்றப்பட்டது என்பர். பெரிய புராணமும் மன்னன் நல்லிலக்கியங்களைப் படித்து வழிகாட்டியாய் வாழ வேண்டும் என்பதனால் தானே எழுதப்பட்டது. என்வே கம்பன் தன் காப்பியத்தில் கதையோடு அறத்தையும் அதிகம் சொல்லியிருப்பான். இதனாலேயே இக்காப்பியம் எக்காலத்திற்கும் உரியதாக விளங்குகிறது.

    கம்பன் கவியின் மொழிவளம் அனைவரும் அறிந்து மகிழ தக்கது. கம்பராமாயணம் விருத்தப்பாவில், அரிதான கலிவிருத்தத்தில்  அமைந்த காப்பியம். கம்பன் மிக அதிகமான வாய்ப்பாடுகளில் அமைந்த கலி விருத்த வகைகளை பயன் படுத்திருப்பார். மற்ற ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம் ஆகியவையும் நிறைந்து காணப்படும். இவரது பாக்களில் அமைந்துள்ள உவமைகள், உருவகங்கள் கற்றோர் வியக்கக் கூடியவை. அதனால் தான் கண்ணதாசன்
சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்
வித்தாக வில்லை எனப்பாடு’
என்றார்.
           இங்கே நான் ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். கம்பனை நான் இதுவரை முழுமையாக படித்ததில்லை. பலரது சொற்பொழிவுகளைக் கேட்டதும் அவ்வப்போது சிறிது சிறிதாக படித்ததும் தான் எனது நிலை. கம்பனை முழுவதுமாக படிக்க வேண்டும் என்ற என் ஆசையே இவ்வலைத்தளம் எழுத என்னைத் தூண்டியது. நாம் படிப்பதை எழுதினால் மனத்தில் பதியுமல்லவா!! அதுதான் என் நோக்கம்.

    கம்பராமாயணம் ஆறு காண்டங்களும் 123 படலங்களும் 10000க்கும் அதிகமான பாடல்களையும் கொண்டது. நான் எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரியது என்பதை உணர்கிறேன். துவங்கியாகிவிட்டது. காலவரையரை ஏதாவது உண்டா? என்றால். பதில் இல்லை என்னிடம். எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் எழுதுவேன். முடிந்தவரையில் தொடர்ந்து எழுதுவேன். தொடர்ச்சியாக எழுதுவேன். படலம் படலமாகவா இல்லை பாடல் அடிப்படையிலா, முடிவெடுக்கவில்லை. படிக்க படிக்க நான் இரசித்ததை பகிர்ந்துக் கொள்கிறேனே!!

தும்பிக்கை யானும் துணைவருவான் தட்டாமல்
செம்மொழிச் சொல்தந்து காப்பாள் தமிழன்னை
எம்மோ டிணைந்திடுவீர் எண்ணங்கள் ஒன்றாக
'கம்பன் கவித்தேன்'
 சுவைப்போம்!


சந்திப்போம்!!

நம்பிக்கையுடன்
உமா