'பாயிரம்' என்பது நூலைப் பற்றி, நூலில் பயின்று வரும் பொருள், யாரால், எங்கு, எதற்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றிக் கூறுவது. பொதுவாக, ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்று சொல்வது பொதுப் பாயிரம். குறிப்பிட்ட நூல் எவ்வாறு அமைந்துள்ளது எனச் சொல்வது சிறப்புப் பாயிரம்.
'பதிகம்' என்றும் இதை சொல்வதுண்டு. பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்து கூறுவதாக 'பதிகம்' அமைந்திருக்கும்.
இக்காலத்தில் 'முன்னுரை' என்று வழங்கப்படுவது நாமனைவரும் அறிந்ததே. இதுவும் பாயிரமே! என்றாலும் இன்றைய முன்னுரை என்பது நூலாசிரியர் புகழ் பாடுவதாய் மாறுபட்டுவிட்டது.
பாயிரத்தை நூலாசிரியரே எழுதுவதும் உண்டு, பிறரால் எழுதப்படுவதுவுமுண்டு. சங்க இலக்கியங்களில் இவை பிறரால், பிற்காலத்தில் எழுதப்பட்டு சேர்ப்பிக்கப்பட்டது. திருக்குறளில் வள்ளுவர் தாமே பாயிரம் எழுதியிருப்பார். பாயிரவியல் என்று ஒரு இயலாகவே அமைத்திருப்பார். கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்கள் பாயிரவியலில் அமைந்திருக்கும். நினைத்த காரியம் நன்கு நிறைவேற ‘கடவுள் வாழ்த்துடன்’ துவங்குவது மரபு. அடுத்து, தான் சொல்லவந்த அறம், பொருள் இன்பம் முதலியன தழைப்பதற்கு ஆதாரமாய் இருப்பது மழை என்பதால் ‘வான் சிறப்பு’ பாடினார்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு
என்பது வள்ளுவன் வாக்கல்லவா! பின் அவ்வறம், ஆகியவற்றை நாம் அறியக் காட்டும் நீத்தாரின், துறவிகளின் பெருமை கூறினார். பின் வீடுவேற்றிற்கு ஆதாரமான அறன் பற்றி பாடி பாயிரம் பகுதியை நிறைவு செய்திருப்பார்.
கம்பராமாயணத்திலும் பாயிரமாக கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நூல் வரலாறு, காவியம் பிறந்த களம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இது தற்சிறப்பு பாயிரம்.
கம்பராமாயணத்தின் 'கடவுள் வாழ்த்து' ஏற்புடை கடவுள் வாழ்த்து எனப்படும். எதைப்பற்றி எழுதுகிறோமோ அவ்விஷயத்திற்கான கடவுளை வாழ்த்தி பாடுவது, ஏற்புடை வாழ்த்து. கவி தன் விருப்ப தெய்வத்தை வாழ்த்துதல் வழிபடு கடவுள் வாழ்த்து.
இப்படி, ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறப்பாக இலக்கணங்கள் இருப்பது தமிழின் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து, தமிழ் செம்மொழியாய் அமைய இக்கட்டமைப்புகள் முக்கியமான காரணம். இன்றைய நிலையில் இவற்றை அறிவார் மிகச் சிலரே என்பது வருத்தமான விஷயம்.
கடவுள் வாழ்த்து – பாயிரம் - பாலகாண்டம்
கம்பன், பாயிரப் பகுதியிலும் மற்றும் ஒவ்வொரு காண்டத்தின் துவக்கத்திலும் 'கடவுள் வாழ்த்து' அமைத்திருப்பார்.
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் அவர்தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களேசித் குணத்தர் தெரிவு அரும் நல் நிலைஎற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றனுள்முன் குணத்தவரே முதலோர் அவர்நல் குணக் கடல் ஆடுதல் நன்று! அரோ.ஆதி அந்தம் அரி என யாவையும்ஓதினார் அலகு இல்லன உள்ளனவேதம் என்பன மெய் நெறி நன்மையன்பாதம் அல்லது பற்றலர் பற்று இலார்.
கம்பன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் மூன்று பாக்களை செய்துள்ளார்.முதல் பாடல், தமிழறிந்தவர் பலருக்கும் பரிச்சயமானது. இப்பாடலில் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்தல் என்ற ஐந்து தொழிலையும் விளையாட்டாகச் செய்யக் கூடியவர், அவரே இறைவன். அன்னவர்க்கே சரண் நாங்கள் என்று ஒன்றேயான பரம் பொருளை வணங்கி இருப்பார்.
அடுத்தப் பாடலில் சித் என்றால் அறிவு, மெய்யறிவாக விளங்கக் கூடியவரின், யாராலும் உணர்ந்துக் கொள்ள முடியாத நிலையை என்னால் உணர்த்தல் அரிது. என்றாலும் முன்னோர்கள் கூறிய மூன்று குணங்களாகிய சத்துவம். இராஜசம், தாமசம் ஆகிய குணங்களில் முதல் குணமான சாத்வீக குணம் கொண்டவரின் குணக்கடலில் நாம் திளைத்தல் நன்று அல்லவோ! அதாவது சாத்வீக குணம் கொண்டவரை வழிகாட்டியாகக் கொள்ளுதல் நாம் இறைவனை அடையும் வழி என்று காட்டியிருப்பார்.
அடுத்தப்பாடலில் அரியதான பலத்துறைகளிலும் முதலும் இறுதியும் கற்று ஓதியவரும், வேதங்களும், பற்றினைத் துறந்தவரும் முடிவில் பற்றக் கூடிய ஒரே பொருள் இறைவன் திருவடிகளே! என்று கூறியிருப்பார்.
இங்கு
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.
என்ற குறள் ஒப்பு நோக்கத்தக்கது.
முதல் பாடலில் பரம் பொருளான இறைவனை நேரிடையாகவும், அடுத்து அடியாரின் துணைக்கொண்டு அவர் வழிநடந்து அதன் மூலமாகவும் இறுதியில் அவனே கதி என்று சரணடைவதையும் காட்டுகிறார்.
எடுத்துக் கொண்ட காவியம் வைணவ இலக்கியம், கம்பரும் வைணவ சமயத்தை பின்பற்றுபவர் என்றாலும் கடவுள் வாழ்த்தில் ஒன்றேயான பரம்பொருளையேப் பேசுகிறார்.
கம்பனுக்கு முன்பு பக்தி இலக்கிய காலத்தில் சமயச் சண்டைகள் பெரிதும் காணப்பட்டன, இலக்கியங்களில் அதன் தாக்கத்தைக் காணலாம். எனவே சமயங்களுக்குள் சண்டை என்பது பேதைமை என்ற தன் பரம் பொருள் கருத்தை பல இடங்களில் கம்பன் கட்டியிருப்பார்.
ஆற்றுப் படலத்தில் ஒரு பாடல்
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
மழைப் பொழியும் ஒரு இயற்கை நிகழ்வு, அறிவியல் பூர்வமாக கடல் நீர் ஆவியாகி, மேலெழும்பி நீர் மிகுவதால் கறுத்து மின்னி இடித்து மழையாகப் பொழிகிறது. கம்பன் தன் சமய கருத்தைச் சொல்ல இவ்விடத்தைப் பயன் படுத்திக் கொள்கிறான்.
வெண்மையான மேகம், உடலெங்கும் திருநீறணிந்த சிவபெருமானைப் போல் காட்சியளிக்கிறதாம். வானத்தை அழகு செய்தவாறே சென்று கடலில் நீரை உண்டு அகில் என்ற வாசனைக் குழம்பணிந்த திருமகளால் பெருமை பெற்றவனான திருமாலின் கரிய வண்ணம் போல் மீண்டதாம்.
மேகம் என்பது ஒன்றே. அதுவே வெண்மையாகவும் கருமையாகவும் காட்சி அளிப்பது போல், பரம் பொருளே சிவனாகவும் பெருமாளாகவும் காட்சி தருகிறான் என்று மிக அழகான உவமையால் காட்டியிருப்பார்.
இதில் இன்னுமொரு அழகும் காணலாம். இங்கு 'ஆர்கலி மேய்ந்து' என்று சொல்லியிருப்பார். மாடுகள் மேயும் என்பது தெரியும். ஒரு பரந்த புல்வெளியில் மேயும் போது பசுமையான புல்லைமட்டும் மேலோட்டமாக மேய்ந்து உண்ணும். கடலில் மேல்பரப்பில் இருக்கும் நீர்தானே ஆவியாகி மேகமாகிறது. ஆழ் கடல் நீர் அல்லவே! அதனால் தான் மேகம் மேலோட்டமாக கடல் நீரை மேய்ந்ததாம்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
என்பதற்கு இது சான்றல்லவா!!
மற்றொரு பாடல் – உலாவியற் படலத்தில். இராமன் வருகிறான். அவனை மிதிலை மக்கள் காண்கின்றனர். அவனது முழு உருவை யாராலும் காணமுடியாது நிற்கின்றனர் என இராமனின் உருவ அழகை காட்ட வந்த கம்பன்
தோள் கண்டார் தோளே கண்டார்;தொடு கழல் கமலம் அன்னதாள் கண்டார் தாளே கண்டார்;தடக் கை கண்டாரும் அஃதே;வாள் கண்ட கண்ணார் யாரேவடிவினை முடியக் கண்டார்?ஊழ் கண்ட சமயத்து அன்னான்உருவு கண்டாரை ஒத்தார்.
எங்கிறார். இராமனின் தோளைக் கண்டவர், தோளை மட்டுமே கண்டார். தோள் அழகில் மூழ்கியவர் மற்ற உறுப்புக்களை காண முடியாமல் நின்றார். தாளினை கண்டவர் தாள் மட்டுமே கண்டார். கையைக் கண்டாரும் அப்படியே என்றவர் அவர்கள் நிலையை
ஊழ் கண்ட சமயத்து அன்னான்உருவு கண்டாரை ஒத்தார்.
என்கிறார். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட சமயத்தவர் பிற சமயத்தவரின் கொள்கைகளை காணாதார் போல இவர்கள் நிலை இருந்ததாக கூறுகிறார்.
வாள் கண்ட கண்ணார் யாரேவடிவினை முடியக் கண்டார்?
அவன் உருவை யாரும் முழுதுமாக காணவில்லை. அதுபோல்தான் சமயங்களும் பரம்பொருளின் உண்மை நிலையை உணராது, முழு உண்மையைக் காணாது தாம் கண்டதே கொள்கை என்று நிற்கின்றன எனக் காட்டுகிறார். இங்கு யானையைத் தொட்டுணர்ந்த குருடர் கதை நினைவிற்கு வருகிறதல்லவா!!
அதேபோல் சீதையின் அழகைக் காட்டுமிடத்து, இன்னும் சிறப்பான ஒப்புமை ஒன்றைக் காட்டுகிறார் கம்பர். கோலங்காண் படலத்தில் இன்னுமொரு பாடல்
பல் இயல் நெறியின் பார்க்கும்பரம் பொருள் என்ன. யார்க்கும்.‘இல்லை.’ ‘உண்டு’. என்ன நின்றஇடையினுக்கு இடுக்கண் செய்தார்.
சீதைக்கு அணிகலன் பூட்டுகிறார்கள். தலையில் , கழுத்தில் என பல அணிகலங்களை அணிந்ததை காட்டிய கம்பனுக்கு இடையணி இடும் நேரம் மட்டும் வருத்தம் மேலோங்குகிறது. ஏனென்றால் பல சமயத்தைச் சேர்ந்தவரும் கடவுள் 'உண்டு', 'இல்லை' என தம்முள் வாதம் செய்தும் 'இல்லை', 'உண்டு' என முடிவுக்கு வர இயலாத கடவுளைப் போல, இருக்கிறதா? இல்லையா? என்றறிய முடியாத இடைக்கு அணிகலன் இட்டு துன்பத்தைத் தந்தார்களாம்.
ஒரு பெண்ணின் இடையை வர்ணிக்கும் இடத்தில் பேரின்ப பொருளாகிய பரம் பொருளைப் பாடுவது கம்பனின் வல்லமைதானே!!
இதில் இன்னுமொரு அழகும் உண்டு, என்னதான் இடை உண்டா இல்லையா என்றாலும் இடையில்லாத மனிதரில்லையே! அதுபோல் தான் நாம் உண்டு இல்லை என்று எவ்வளவுதான் வாதித்தாலும் கடவுள் இருக்கிறார். நம்மால் அறியத்தான் முடிவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை மிக அழகாகக் கூறுகிறார்.
பிற காண்டங்களில் இருக்கும் கடவுள் வாழ்த்தையும் பாயிரத்தின் மற்ற பகுதியையும் அடுத்தப் பதிவில் சிந்திப்போம்.
அன்புடன்
உமா