Saturday, February 27, 2021

‘கம்பன் கவித்தேன்’ – பாயிரம் 2- கடவுள் வாழ்த்து - தொடர்ச்சி

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த
மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப -
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.

இப்பாடல் பாயிரப் பகுதியில் அமையவில்லை என்றாலும், அயோத்தியா காண்டத்தில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பகுதி என்பதால், ‘இறை’ கொள்கையை கம்பன் எவ்வாறு அழகாக எடுத்துச் சொல்கிறான் என்பதை அறியும் விதமாக இப்பகுதியில் இதனை நாம் சிந்திப்போம்.

அயோத்தியா காண்டத்தில் தான் இராமாயணத்தின் முக்கிய முதல் திருப்பம் இடம்பெறுகிறது. கூனியின் சூழ்ச்சியும் இராமன் கானேகுதலும் இக்காண்டத்தில் நடைப்பெறுகிறது. 

கிட்டத்தட்ட இராமாயணத்தின் சுருக்கமாக இப்பாடல் அமைந்திருக்கிறது. கூனியும், ‘கூனும்’ என்பது ஆகுபெயர்,  சிறிய கோத்தாயும் செய்த கொடுமையினால் கோல் துறந்து, கானும் கடலும் கடந்து அமரர் இடர் தீர்த்து வீரக் கழலணிந்த வேந்தன் என்று இராமாயணக் கதை இதில்  சொல்லப்பட்டிருப்பது அழகு.

இங்கு ‘கோல் துறந்து’ என்று கம்பன் சொல்லியிருப்பதும் அறிந்து மகிழத்தக்கது. அவன் பரம் பொருள். அவனே அனைத்துமாய் இருப்பவன். அவனே உலகை ஆள்பவன். அவன் அரசாட்சியை இழத்தல் என்பது சரியாகுமா? அவதார நோக்கம் நிறைவேறவே அரசாட்சி அவனால் துறக்கப்பட்டது என்பதைச் சொல்லும் விதமாக ‘கோன் துறந்து’ என்று கூறியிருப்பார் கம்பன்.

இப்பாடலின் முதல் நான்கு வரிகள் இறைவனின் இயல்பை அருமையாக எடுத்தியம்புகின்றன. வானின்று இழிந்து என்பது கடவுள் தம்நிலையிலிருந்து இறங்கி வந்து, எல்லையில்லா ஐம்பெரும் பூதங்களாலான இவ்வுலகம் முழுவதும்

ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப -

ஊன் என்றால் உடல். இறைவன் உடம்பில் உயிர் போல உள்ளும், உடலுக்கு உணர்வைப் போல் புறத்தேயும் இருப்பவன்.

அப்படிப்பட்ட இறைவனே!

கூன் கொண்ட உடலை உடைய கூனியும்,சிறிய கோத்தாயாகிய கைகேயியும் செய்த கொடுமையினால் கோல் துறந்து, கான் கடந்து, இமையோர் இடுக்கன் தீர்த்தவனாகிய இராமனாக அவதரித்தவன். என்கிறார். கம்பன் இக்காவியத்திற்கு இட்ட பெயரே ‘இராமாவதாரம்’ தானே!

மேலும் இறைவனின் தன்மையை ஆரண்ய காண்டத்தின் கடவுள் வாழ்த்தில்

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா
ஓதி ஓதி உணருந்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன்முதலோர் தெரிகிலா
ஆதி நாதர் அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ.

பேதம் என்றால் வேறுபாடு, மாற்றம், தனது உயர்ந்த நிலையிலிருந்து வேறுபடாமல், தன்னிலிருந்து தோன்றும் உருவங்களிலிருந்தும் தான் வேறுபடாமலும், மீண்டும் மீண்டும் ஆராய்ந்து உணரும் போது மெய்யறிவைத் தரும், வேதமும் அதை ஓதும் அந்தணரும், பிரமனும் அறிந்து கொள்ள இயலாத முழு முதற்கடவுள், அவர் நம் சிற்றறிவுக்கு அறியும் பொருளாகவும் உள்ளார். எனவும்

கிட்கிந்தா காண்டத்தில்

மூன்று உரு எனக் குணம்
மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும்,
அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
இடையில் நின்றவும்,
சான்றவர் உணர்வினுக்கு
உணர்வும், ஆயினான்

சிவன், விஷ்னு பிரமன் என்று மூன்று உருவும், சாத்வீகம், இராஜசம், தாமசம் என்ற மூன்று குணஙகளும் கொண்டவனாய் உலகில் தோன்றிய அனைத்து தத்துவங்களாயும், அவனை அறிந்து கொள்ளும் வகையில் உலகில் உருவங்களாயும் அவ்வுருவில் நின்ற உயிராகவும், ஞானிகளால் உணர்ந்து கொள்ளும் படியாகவும் இருப்பவன் என்றும் காட்டுகிறார்

சைவ இலக்கியமாகிய சிவபுரானத்திலும் மாணிக்கவாசகர்

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
என்றும்
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

எனவும் பாடியிருக்கிறாரே!! 

அடுத்து சுந்தர காண்டத்தில்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ‘
அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே,
மறைகளுக்கு இறுதி ஆவார்!

அலங்கலில் தோன்றும் பொய்மை அரவு, இருளில் மாலையானது பாம்பென தோற்றம் அளிப்பது போல் ஐம்பூதங்கள் இணைந்து வேறுவேறாக நின்ற பன்மைத் தோற்றம் யாரைக்கண்டால் மறையுமோ அவரே வேதங்களுக்கெல்லாம் இறுதியாக இருப்பவர், அவரே கையில் வில்லேந்தி இலங்கையில் போர் புரிந்தார் என்கிறார். இருளில் பூமாலையானது பாம்பாக தோற்றம் அளித்தாலும் வெளிச்சம் வந்ததும் அது பூமாலைதான் என்பது புலப்படும் அதுபோல் மெய்ஞானம் வந்தால் இயற்கையின் பல்வேறு உருவங்களும் இறைவனே என்ற தெளிவு பிறக்கும். அந்த மெய்ஞானமாக விளங்குபவரே கடவுள் எனக் காட்டுகிறார். இங்கும் அக்கடவுளே இராமனாய் வந்தார் எனக் காட்டும் விதமாய், அவரே இலங்கையில் பொருதார் எனச் சொல்லுகிறார்.

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

என்று எல்லாமாய் நிற்கும் பரம் பொருளைப் மாணிக்கவாசகரும் பாடவில்லையா!

இப்படி மறைகளுக்கு, வேதங்களுக்கெல்லாம் இறுதிப் பொருளாய் விளங்கக்கூடிய இறைவனின் தன்மையை மிக அருமையாக காட்டிய கம்பன் யுத்த காண்டத்தின் வாழ்த்தில் முத்தாய்ப்பாக

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்,
பல என்று உரைக்கின் பலவே ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமே ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ! பிழைப்பு? அம்மா!

ஒன்றுதான் என்றால் பரம்பொருள் ஒன்றுதான். பல என்று சொன்னாலும், ஐம்பூதங்காளாலான பல பொருளாகவும் அவற்றின் உள்ளுறு உயிராகவும் உணர்வாகவும் பலவாக இருப்பதும் அவனே! 
உலக பொருட்களின், ஞாயிறு, திங்கள் போல், இவற்றின் தன்மையைப் போல் பன்மடங்கு வாய்த்தவன் எனக் கூறி 'ஆம்' என்று காட்டினாலும், 
இல்லை, இவை அவன் தன்மையின் ஒருத்துளியே என்பதால் 'இல்லை' என்றாலும் அவ்வாறே. 
'உளது' என்று காடடினால் 'உளதாயும்' இருக்கக்கூடிய இறைவனின் நிலை மிகப் பெரியது அதை உணர்ந்து உய்வது எவ்வாறு என்று கூறும் கம்பன், அப்பரம் பொருளே இராமனாய் இறங்கி வந்து நாம் உய்ய வழிகாட்டுகிறான் என்பதை கடவுள் வாழ்த்து பகுதியிலும் நூலின் பல இடங்களில் அனுமன் வாயிலாகவும் மண்டோதரி வாயிலாகவும் கூறுகிறார்.

இப்படிப்பட்ட இராமனின் அவதாரப் பெருமையை, கம்பன், தான் 'ஆசைபற்றி அறையலுற்றதாக' அவையடக்கத்தில் கூறும் அழகை அடுத்தப் பகுதியில் சிந்திப்போம்.


அன்புடன்
உமா

No comments:

Post a Comment