Sunday, February 28, 2021

‘கம்பன் கவித்தேன்’ – பாயிரம் 3 -அவையடக்கம்

இப்பகுதியின் ஆறு பாடல்களும் தனது நூலைப் பற்றி மிகுந்த அவையடக்கத்துடன் கம்பன் நமக்கு சொல்லும் செய்தி
.
ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.

முதல் பாடலில், இக்கதையை தான் எதற்காக இயற்றினேன் என்று சொல்லுகிறார் கம்பர். ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’. அறைதல் என்றால் சொல்லுதல். ஆற்றல் காரணமாக அல்ல வெறும் ஆசையினாலேயே எழுதுகிறேன் என்கிறார் கம்பர்.

எதை எழுதினார் என்றால் ‘காசு இல் கொற்றத்து இராமன் கதை’. குற்றமற்ற இராமன் கதையை ஆசை மட்டுமே காரணமாக எழுதுகிறேன் என்று சொன்னவர் அதற்கு ஒரு அழகான உவமையைச் சொல்லுகிறார். இது கம்பனை சிறிதேனும் படித்தவர் அறிந்த பாடல் தான். ஒரு பூனை, ஆழ்ந்து அகன்ற ஒரு பாற்கடலை தன் நாவால் நக்கியே குடித்து விடமுடியும் என்று நினைத்து பாற்கடலை அடைந்ததைப் போல் இப்பெருங்காவியத்தை நான் சொல்லத் துணிந்தேன் என்கிறார்.

இங்கு உவமையாவது பூனையின் முயற்சி. பூனை உவமையானால். பூனையால் எப்படி முடியாதோ அப்படி முடியாத காரியம் இது என்பது போல் ஆகிவிடும். ஆயின்

பூனையால் பாற்கலை குடித்து விட முடியாது தான். என்றாலும் பேராசைக் காரணமாக நக்கியே குடிக்க முயல்கிறது. அதுபோல் குற்றமற்ற இராமன் பெருமையையும் யாராலும் சொல்லுவிட முடியாது. என்றாலும் ஆசை காரணமாக நான் சொல்லத் துணிந்தேன் என்கிறார்.

இப்படி இக்காவியம் முழுவதும் இருக்கும் கம்பனின் உவமைகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. இக்காலத்தில் கம்பனை எடுத்தாளாத படைப்பாளிகளே இல்லை எனலாம்.

அடுத்தப் பாடல் இன்னும் அழகு.

நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன்: எனை?
வைத வைவின் மராமரம் ஏழ் தொளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

கவிச்சக்ரவர்த்தி’ என்றும் ‘கம்பர் கவியே கவி’ என்றும் புகழப்படும் கம்பன் தன் கவிக்கு கொடுத்த அடைமொழி என்னதெரியுமா? ‘நொய்தின் நொய்ய சொல்’ ‘நொய்ய சொல்’ என்பது கருத்தாழமற்ற வெற்றுச் சொற்கள் என பொருள் படும்.

இன்றைய படைப்பாளிகளை எண்ணிப் பாருங்கள். பணமும் பதவியும் இருந்துவிட்டால் வெட்கமின்றி புத்தகம் வெளியிடுகிறார்கள். சற்றேனும் சொந்த கற்பனையோ, கருத்தோ இருப்பதில்லை. ஆயின் தற்புகழ்ச்சி மட்டும் புகைப்படத்துடன் பெரியதாய் இருக்கும். வெட்கம்.

ஆனால் மொழியின் ஆழத்தையும் கற்பனையின் உச்சத்தையும் தொட்ட கம்பன் தன் கவியை நொய்தின் நொய்ய சொல்’ என்கிறான். ஆனால் இப்பாடலிலேயே அவனது புலமையை, சொல் ஆளுமையை நம்மால் உணரமுடியும்.

வைத - பெரியோர்கள் சினத்தில் சாபமிட்டுச் சொல்லிய

வைவின் வசைச்சொல்

மராமரம் ஏழ் தொளை எய்த – ஏழு மரங்கள் தொளைப் படுமாறு 

எய்தவற்கு – அப்படி அம்பை எய்தியவருக்கு -செலுத்திவருக்கு

எய்திய - அமைந்த

மாக்கதை செய்த – பெருங்கதையை இயற்றிய

செய்தவன்- செய்த தவத்தையுடையவன் இங்கு வால்மீகியை குறிக்கிறது

இப்படி வைத வைவின், எய்த எய்தவற்கு, செய்த செய்தவம் என்று சொல்லோடும் பொருளோடும் விளையாடிய கவி தன் சொல்லை ‘நொய்தின் நொய்ய’ என்றானே! என்னே! அவன் எளிமை!!

கருத்துக்கு வருவோம்.

இப்பாடலில் கம்பர் தான் வால்மீகியின் அடியொற்றியே இக்கதையை எழுதியதாக நமக்குத் தெரிவிக்கிறார்.

இங்கும் ஒரு அருமையான உவமையைக் காட்டுகிறார். பெரியவர்கள் சினந்து சாபமிட்டுச் சொல்லும் ஒரு சொல் எவ்வாறு ஏழுதலைமுறையினரைத் தாக்குமோ! அவ்வாறு ஒரே அம்பு எய்தி மிகப்பெரிய ஏழு மரங்கள் ஒன்றாகத் துளைப்படுமாறு செய்த இராமனது கதையை, தான் செய்த தவத்தின் காரணமாக எழுதும் பேறு பெற்றவரான வால்மீகியின் சொல்லை அடிப்படையாகக் கொண்டே நான் இக்காவியத்தை எழுதினேன் என்கிறார். செய்தவத்தான் என்று வால்மீகியைக் குறிப்பிடுகின்றார்.

கம்பராமாயாணத்தின் சிறப்பே அது காட்டும் வாழ்வியல் நெறிகள் என்பதை முன்பே கண்டோம். இங்கு மிக முக்கியமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறார் கம்பர். பெரியவர்கள் சினத்து சொல்லின் அது நம் தலைமுறைகள் ஏழினையும் தாக்கும் என்பது தான் அது. எனவே பெரிய தவமுடையவர், முன்னோர்கள் சினமுறுமாறு நாம் நடக்கக் கூடாது. இது அன்றும் இன்றும் என்றும் கடைபிடிக்கவேண்டிய நெறி.

திருப்பாவையில் ஆண்டாளும் ‘செய்யாதனச் செய்யோம்’ என்று சொல்லவில்லையா!

வள்ளுவனும் பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரத்தில்

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின்

எவ்வளவுதான் பெருமையும் புகழும் நட்பும் உடையவராயினும், பெரிய தவமுடையவர் அவர்களை வெகுண்டால் உய்ய மாட்டார்கள் என்று சொல்லவில்லயா?

மனத்தில் கொள்வோம்.

அடுத்த பாடல்

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது? எனில்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.

வையம் என்றால் உலகம். இங்கு கற்றறிந்த பெரியோரை குறித்தது. கற்றறிந்தவர் என்னை இகழுமாறும் , குற்றம் அல்லது ஏளனத்திற்கு தான் ஆளாகுமாறும் இக்கதையை நான் ஏன் இயம்புகிறேன் என்றால் ‘ பொய் இல் கேள்வி புலவர் தெய்வத் தன்மையால் சொல்லிய கவியின் பெருமைச் சொல்லும் அவாவினாலே என்கிறார். அக்கவியில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்பதாலேயே.. தமிழில் வள்ளுவரை ‘பொய்யாமொழிப் புலவன்’ என்கிறோமல்லவா. அவ்வாறே வடமொழியில் வசிட்டர், வால்மீகி போன்றோரை பொய் இல் கேள்வி புலவர் என்பர். தெய்வ அருள் இருந்தால் மட்டுமே ஆழ்ந்த அக்கவிகள் சாத்தியம் என்பதால் தெய்வ மாக் கவி என்கிறார்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ.

அடுத்தப் பாடலில் ‘அசுணம்’ என்ற ஒரு விலங்கைப் பற்றிய குறிப்பைத் தருகிறார். மா என்றால் விலங்கு அசுண மா என்பது மிகவும் ஆச்சரியமான விலங்காகத் தெரிகிறது. அது மென்மையான யாழ் இசையைக் கேட்டால் தன் இடத்தை விட்டு வெளிவருமாம். இரசிக்குமாம். அதுவே சற்று இறைந்து ஒலிக்கக் கூடிய பறை போன்ற இசைச் கேட்டால் இறந்தே விடுமாம்.

இங்கு அவ்விலங்கின் இயல்பை உவமையாக்கி செறிவுற்ற நல்ல விருத்தப் பாக்களை கேட்ட செவிகளுக்கு, எனது பாக்களை கேட்கும் பொழுது அசுண மாவின் காதில் பறை கேட்டது போல் இருக்கும் என்கிறார்.

இப்படியெல்லம் தன் கவியை மிக எளிமையானது என்று சொன்னவர் அடுத்த இரண்டு பாடல்களில் பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டும் என்று, இயல், இசை, நாடகம் என்றமைந்த முத்தமிழிலும் முறையாக கற்றுணர்ந்த சிறந்த பெரியோரை வணங்கி கேட்பார் போல் எழுதுகின்றார்.

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?

பித்தர் பிதற்றிய சொற்களையும், அறிவற்ற பேதையர் சொன்ன சொற்களையும் மேலும் பக்தியின் மேலீட்டால் பக்தர் சொன்ன சொல்லையும் பெரிதாக எண்ணி ஆராய்வதுண்டோ அது போல் எங்கவியையும் நீவீர் ஏற்க வேண்டும் என்று சொல்கிறார்.


அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

சிறு பிள்ளைகள் கற்பனையில் ஆடலரங்கும் அறையும் அமைத்து தரையில் கோடு கிழித்து கற்பனை வீடுகட்டி விளையாடினால், சிற்பி அல்லது இக்காலத்தில் கட்டிடத்துறையில் வல்லுனர்கள் என்று வைத்துக் கொள்ளலாம், அது தவறு என்று காய்வரோ? மாட்டர்கள் அல்லவா! அவ்வாறே, சிறிதும் ஞானமில்லாத என் புன் கவிகளை முறையாக நூல் உணர்ந்த பெரியோர் தவறாக கொள்வரோ! கொள்ளக் கூடாது என்று கவி கூறுகிறார்.

மடமை அல்லது அறியாமை உடைய சிறு குழந்தைகள் அவ்வாறு கற்பனையில் வீடு கட்டி விளையாடுதல் அவர்களது சிறப்பையே காட்டுகிறது. இது மனத்தால் இரசிக்க வேண்டியது. அறிவால் ஆராய வேண்டியதல்ல. எனவே உணர்வு பூர்வமான ஒருவிஷயத்தை அறிவு பூர்வமாக அணுகலாகாது என்று சொல்வதாயும் இதைக் கொள்ளலாம்.

இப்படி பல உவமைகளால் தன் காப்பியத்தை அறிமுகபடுத்திய கவி, இந்நூலிற்கு மூல நூல் எது என்பதை இப்பாடலில் சொல்கிறார்.

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

வடமொழியில் இராம கதையை செய்தவர் மூவர். வான்மீகி, வசிட்டர், போதாயனார். இவர்களுள் முன்னவராகிய வான்மீகியின் உரைப் படியே தான் தமிழ்ப் பாவினால் இக்காவியத்தைச் செய்துள்ளேன் என்று நூல் வரலாறு அறிவிக்கிறார். முன்பே, செய் தவன் சொல் நின்ற தேயத்தே’ என்று சொன்னாரல்லவா!

அடுத்து

இக்காப்பியம் எழுதபட்ட இடத்தை பதிவு செய்கிறார்.

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே

ஒழுக்கத்தில் நின்று உயர்ந்த திருமாலின் அவதாரங்களின் ஒன்றான இராமாவதாரத்தைச் சொல்லும், செய்யுள்களால் ஆன குற்றமற்ற சிறந்த இக்காப்பியம் சடையப்பரின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது என்பது கருத்து.

இங்கு நடையில் நின்றுயர் நாயகன் என்று சொன்னதற்கொப்ப காப்பியம் முழுதும் இராமனின் குணநலனை பல இடங்களில் சிறப்பாக காட்டியிருப்பார். முக்கியமாக தமிழ் பண்பாட்டிற்கொப்ப காட்டியிருப்பார். இதற்காகவே வான்மீகியிடமிருந்தும் மாறுபடும் சில இடங்களும் உண்டு.

உதாரணமாக அகலிகை கல்லாக இருந்த பொழுது இராமனின் கால் பட்டு உருபெற்றதாக வால்மீகத்தில் இருக்கும் அதுவே கம்பன் அமைக்கும் போது இராமனின் கால் துகள் பட்டதாக காட்டுவார். இவ்வாறு பல இடங்களில் தமிழ் பண்பையும் ஒழுக்கத்தையும் காட்டி நாம் இன்றும் கற்க வேண்டிய பல விஷயங்களை பாடியிருப்பார்.

கம்பரின் தமிழையும் தமிழரின் பண்பையும் கம்பனின் கவிமூலம் கற்போம். அடுத்த பதிவில் கம்பராமாயண நூலுக்குள் நுழைவோம். ஒவ்வொரு படலத்திலுமுள்ள கருத்தை, நயமிக்க சில கவிதைகளை சிந்தித்து மகிழ்வோம்.


அன்புடன்
உமா



No comments:

Post a Comment