Sunday, March 28, 2021

கம்பன் கவித்தேன் - பாலகாண்டம் - நாட்டுப் படலம்

வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்.

    என்று நாட்டுப்படலத்தைத் துவங்குகிறார் கம்பன். நீக்குவதற்கு இயலாத செம்மையான நான்கு அடிகள் கொண்டதும் செவிகளுக்கு இன்பமளிக்கக்கூடியதுமான கவிகளை, தேவரும் மகிழுமாறு வால்மீகி என்பான் தந்தான். அவ்வினிய கவிகளால் அவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் கள்ளுண்டு பேசயியலா, ஊமை பேச முயன்றதைப்போல் நான் கூறுகிறேன், என்கிறார்.

    பேச முடியாதவருக்கு பேச்சு வந்தால் எவ்வாறு நினைத்ததையெல்லாம் பேசிமுடிக்க முயல்வாரோ அவ்வாறு நானும் எழுத முயன்றேன் என்றும் கொள்ளலாம். அல்லது பேசயியலா ஒருவர் பேச முயன்றால் எப்படித் தெளிவில்லாமல் இருக்குமோ, அவ்வாறு தான் முயன்றதாக சொல்வதாகவும் கொள்ளலாம். அன்பு என்னும் நறவம் மாந்தி, அன்பும் கள்ளைப்போல் மயக்கத்தை தரக்கூடியதல்லவா! இது கம்பன் வால்மீகி மேல் வைத்திருந்த அன்பை, மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

    மேலும் இப்பாடலில் ஒரு கவிதைக்கான முக்கிய இலக்கண கூறு ஒன்றை எடுத்துக் காட்டியிருப்பார் கம்பன். நீக்கிவிட இயலாத நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்பான். ஒரு கவிதை என்பது சொல்ல வந்த கருத்தை மிகவும் குறைந்த சொற்களில் தெளிவாகச் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும் போது ஒரு சொல்லை எடுத்தாலும் பொருள் தராது. அதுமட்டுமில்லாமல் ஒரு சொல்லை இன்னுமொரு சொல்லிட்டு மாற்றியமைக்கவும் முடியாதபடி சிறப்பான சொற்களால் அமைக்கப்பட வேண்டும். இது கம்பன் காட்டும் நெறி.

இதன்படியே இப்படலம் முழுதும் உள்ளப் பாடல்களில் பல அணிகள், பின்வரு நிலை அணிகள், தற்குறிப்பேற்ற அணி, உவமையணி, எதிர்மறை உவமையணி, ஒருபொருட் பன்மொழி, பல பொருள் ஒருசொல் என பல இலக்கண கூறுகள் நாமறிந்துணர கிடைக்கின்றன. பார்ப்போம்.

இப்படலத்தில் கோசலத்தின் வளம், மருத நில காட்சி, நெய்தல் நில காட்சி, மக்கள் செழிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறார் கம்பன். என்னதான் வால்மீகி பாடிய நாட்டை தான் பாடுவதாகச் சொன்னாலும் கம்பன் காட்டும் வளங்களும் ,மக்கள் பண்பாடும், காட்சிகளும், காவிரி பாய்ந்து வளம் சேர்த்த சோழ பெரு நாட்டையும், தமிழ் மக்களையும் நம்கண்முன்னே நிறுத்துகின்றன என்பதில் மாற்றமில்லை. நாமும் சோழ நாட்டினையும் காவிரியையும் தமிழ் பண்பாட்டையும் மனத்தில் கொண்டே இக்காவியத்தை இரசிப்போம்.

வரம்பெலாம் முத்தம் தத்தும் மடையெலாம் பணில மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக் குழியெலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரும்பெலாம் செந்தேன் சந்தக் காவெலாம் களிவண்டு ஈட்டம்.

    வயல் வரப்புக்களில் எல்லாம் முத்துக்கள், நீர்பாயும் இடங்களிலெல்லாம் சங்கு, அமைக்கப்பட்ட கரைகளிலெல்லாம் பொன், எருமைகள் சேற்றில் படியுமல்லவா, அங்கெல்லாம் செங்கழுநீர் மலர்கள், உழப்பட்ட நிலங்களில் பவளங்கள் இருந்தனவாம், விவசாயத்திற்கு பயன் படுத்தப்படாத நிலங்களில் கூட தேன் நிறைந்து ஓடியதாம் என்று பொதுவாக நாட்டின் வளம் சொல்கிறார். இங்கு முத்து, சங்கு போன்றவை நெய்தல் நிலப் பொருட்கள். கடலும் கடல் சார்ந்த இடத்திலும் காணப்படுபவை. ஆனால் இங்கு வயல், வயல் சார்ந்த மருத நிலத்தில் இருப்பதாக காட்டுவது திணை மயக்கம். நாம் ஆற்றுப்படலத்தில் முன்பே காண்டோமல்லவா, முல்லையை குறிஞ்சியாக்கி மருதத்தை முல்லையாக்கி, இப்படி நிலத்தன்மையை மாற்றி பாய்ந்ததல்லவா ஆற்று வெள்ளம்!!! அதை இங்கும் காட்டுகிறார் கம்பர்.

ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலைச்
சாறு பாய் ஓதை வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும்மா மருத வேலி..

இது ஒரு அழகான மருத நிலக் காட்சி. இங்கு ஆறு பாய்வதால் வரும் ஓசை, உழவர்கள் ஆலைகளில் ஏற்படுத்தும் ஓசை, அவ்வாலைகளில் கரும்பின் சாறு பாய்வதால் வரும் ஓசை , நீர்நிலைகளில் சங்குகள் இருந்தன எனப்பார்த்தோமல்லவா அவற்றில் எழும் ஓசை, எருதுகள் தம்முள் மோதுவதாலும், நீர் நிலைகளில் பாய்வதாலும் எழும் ஓசை என இவையெல்லாம் கலந்து ஒலிக்கும் என்று மருத வளம் காட்டுகிறார். இங்கு அரவம், அமலை, ஓதை, ஓசை தமரம், துழனி என்ற பல சொற்களும் 'ஓசை' என்ற ஒரு பொருளையேக் குறித்து நிற்கின்றன. இது பொருள் பின்வருநிலை அணி. தமிழுக்குரிய சிறப்பம்சங்களில் ஒன்று இது.

தாமரைப் படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார்க்
காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்
மா முகில் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்
நாமுதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளு மன்னோ.

இப்பாடலில் ‘படுவ’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ‘தங்குதல்’ என்ற ஒரு பொருளையே தந்தது. எனவே இது சொல்பொருட் பின்வருநிலையணி. மேகங்கள் கடலிலிருந்து முத்து, பவளம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மழையை மட்டும் பொழிந்து, மற்றதை தானே வைத்துக் கொண்டதாம். அதனால் தான் மழைநீரில்லா மேகம் வெண்மையாகவும் வானம் சிவந்தும் காணப்படுகிறதோ!! அழகு. விலைமாதர் கண்களும் காமன் வில்லும் காமுகரிடம் மட்டுமே தங்கும் என்று பிரித்துக் காட்டியவர், அம்மக்கள் நாவில் உண்மையும், ஞான நூல்களின் பொருளும் தங்குவன எனவும் தெளிவுறுத்துகிறார்.

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ

என்ற பாடலில் மருத நில அழகையும்

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல்.

நெல்மலை யல்லன நிரைவரு தரளம்
சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்
நன்மலை யல்லன நதிதரு நிதியம்
பொன்மலை யல்லன மணிபடு புளினம்

    என்ற பாடல்களில் நெய்தல் நில வளத்தையும் அழகாக் காட்சிப்படுத்துகிறார் கம்பன்.

    மருத நிலத்தில் மருதம் என்ற அரசவையில் ஒரு அழகிய ஆடல் காட்சி அரங்கேறுகிறது. இடித்துக் கொண்டு மழைவரும் நேரம் மயில்கள் ஆடுமல்லவா! இதோ சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன. மேகங்கள் முழ்வு போல் முழங்குகின்றன. அவற்றிற்கு குவிந்த தாமரை விளக்காக நிற்கிறது. அரங்கம் என்றால் விளக்கிருக்க வேண்டுமல்லவா! மாலை நேரம் தாமரை குவிந்து விளக்காக நிற்கிறது. அதே நேரம் குவளை மலர் கண்விழித்து இவ்வாடலைப் பார்கின்றதாம். தாமரை குவியும் நேரம் குவளை மலருமல்லவா!! அவை ஆடல் காண்போராக படுகிறது கம்பனுக்கு. நீர்நிலைகளில் அலை ஆடுகிறது அது திரைச்சீலை ஆடுவதாக காண்கிறார். திரையும் அமைந்துவிட்டது. இசைவேண்டுமே. இசைக்கா பஞ்சம்! யாழிசைப் போல் வண்டுகள் பாடுகின்றனவாம். இவ்வரிய காட்சியை கண்டவாறு மருதம் வீற்றிருந்ததாம்!! கற்பனைக்குக் கம்பன் அல்லவா!!

    அடுத்து நெய்தலைக் காட்டும் பொழுது

    ஆளும் முறை அறிந்து, பேராசைக்கொள்ளாமல், கோபம் காட்டவேண்டிய இடத்தில் கோபித்து, அளவறிந்து வரி பெற்று, தம் குடிகளின் நலன் கருதும் வேந்தன் நாட்டைக் காப்பதால் , அந்நில மகள் எவ்வாறு பாவச் சுமைநீங்கி இளைப்பாறுகிறாளோ அவ்வாறு மிகுந்த செல்வங்களை கொண்டு வந்த கப்பல்கள் தங்கள் சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாறுவதாய்க் காட்டுகிறார். இது அழகான உவமையணி.

இங்கு

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடியாத்து, நாடுபெரிது நந்தும்;

என்ற புறப்பாடல் கருதத்தக்கது.

    அப்படி செல்வங்கள் நிறைந்த நெய்தல் நிலத்தில் நெல் மலையாக குவிக்கப்படாத இடங்களிலெல்லாம் முத்துக்கள் மலைகளாக இருந்தனவாம். முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில் எல்லாம் உப்பு மலையாக குவிக்கப்பட்டிருந்தனவாம். உப்பை தொடுகடல் அமிர்தம் என்றுரைப்பது அழகு, நயமிக்கது. உண்மைதானே!! அப்படி உப்புக் குவியல் இல்லாத இடங்களில் ஆற்றில் அடித்துவரப்பட்ட பொன், மணி ஆகியன குவிந்து கிடந்தனவாம். எங்கு நோக்கினும் பொன்னும் பொருளுமாகக் கிடந்த நெய்தல் வளத்தை தனித்துவமாக எடுத்துரைப்பது கம்பன் திறமன்றோ!


இயல்புடை பெயர்வன மயின்மணி யிழையின்
வெயில்புடை பெயர்வன மிளிர்முலை குழலின்
புயல்புடை பெயர்வன பொழிலவர் விழியின்
கயல்புடை பெயர்வன கடிகமழ் கழனி.

இப்பாட்டில் மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று திரிகின்றன எனவும், அவர்கள் அணிந்துள்ள அணிகலங்காளைப் போல் வெயில் வீசியது எனவும், அவர்களின் கூந்தல் போல் மேகங்கள் இருந்தன எனவும் அவர்களது கண்களைப் போல் மீன்கள் துள்ளின எனவும் அமைத்திருப்பதால் இது எதிர்மறை உவமையணி.


ஆலைவாய் கரும்பின் தேனும் அரி தலை பாளைத் தேனும்
சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந்தோடி வங்க
வேலைவாய் மடுப்ப உண்டு மீனெலாங் களிக்குமாதோ.

இந்தப் பாடலில் 'தேன்' என்ற ஒரு சொல் கரும்பின் சாறு, கள், பழச் சாறு, தேன் கூட்டிலிருந்து வழியும் தேன், மலர்மாலைகளிலிருந்து வடியும் தேன் என்று பல பொருள் குறித்து வருவதால் இது சொல்பின்வருநிலையணி.


துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்து எனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே.

    மென்மையான பெண் ஆடு ஈன்ற செம்மறி கடாகள் வலியனவாக இருந்தன எனக் காட்டுகிறார். ஆண்களின் வலிமைக்கு பெண்கள் காராணமல்லவா!! பெண்ணை வலிமைக்குறைந்தவள் என்பது தகுமோ! சிந்திக்க வைக்கிறார்.

    அடுத்து காணும் இரண்டுப் பாடல்களிலும் சேவல் சண்டை, எருது சண்டை, செம்மறி சண்டை ஆகியன நடைமுறையிலிருந்தன எனக் காட்டுகிறார் கம்பன்


பொருந்திய மகளிரோடு வதுவையிற் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல் சென்று என்ன இயல் இசை பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணிவிரும்புவாரும்.

    இந்த பாடலில் பெருத்தம் பார்த்து மணமுடித்தனர் என்பது பெறப்படுகிறது, அப்படி மணமுடித்தவர், இசைப்பயன் துய்ப்பார், இதற்கு கம்பன் காட்டும் உவமை அழகு பருந்தொடு நிழல் செல்வது போல் என்கிறார் பருந்து மேலே பறக்கும் பொழுது அதன் நிழல் மேடு பள்ளம் என்று ஏற்ற இறக்கங்களில் எல்லாம் சென்றாலும் பருந்தோடு கூடவே செல்லும் அதுப் போல் இசையமைக்கப்பட்ட இயற்றமிழ் பாடல்களின் பலனும் ஒன்று போல் மக்களைச் சென்றடையும் என்று காட்டுவது சிறப்பு. அப்படி இசை அனுபவிப்பார், அமிழ்தத்தைவிட இனிய கேள்வி செல்வம் செவிவழி அனுபவிப்பாரும், செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமல்லவா!! விருந்தினர் முகம் கண்டு விருந்து அளிக்க விரும்புவாரும்,

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

என்பதால் விருந்தினர் முகம் பார்த்து விருந்து செய்தார்களாம்… இத்தோடு இப்பாடலின் பொருள் முடியவில்லை அடுத்த நான்கு பாடல்களிலும் கருத்து தொடர்கிறது.

கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி உறுபகை யின்றிச் சீறி
வெறுப் பில களிப்பின் வெம்போர் மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட வாவி பேணா வாரணம் பொருத்து வாரும்.

    இந்தப்பாடலில் முன்பகை யின்றியே சினம் காட்டி , போர் செய்ய வெறுப்பில்லாத வீரம் கொண்ட சேவலை போரிடச் செய்வாரும் என்று ‘சேவல் சண்டை’ பற்றிய குறிப்பைத் தருகிறார். அடுத்தப்பாடலில் எருதுகளைச் சண்டையிடச் செய்ததையும் காட்டுகிறார்.


எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்னதாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்.

இங்கு அவர்காட்டும் உவமை அழகு. இரண்டு எருதுகள் இரண்டும் ஒரே வலிமை கொண்டன. அவை மோதுவது இருள் இரண்டு கூறாக பிரிந்து தம்முள் மோதியதைப் போலிருந்தது என்கிறார். இங்கும் நாகு என்பது பெண் எருமை ஈன்ற ஆண் எருதுகள் வலிமை கொண்டன எனக்காட்டி பெண்ணினத்தின் பெருமை கூறி மகிழ்கிறார். அப்படி எருதுகளைச் சண்டையிடச் செய்து ஆரவாரம் செய்வாரும்


முள்ளரை முளரி வெள்ளி முளையிற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளிமீன் துடிப்ப ஆமை தலைபுடை சுரிப்பத் தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்பு வாரும்.

    தாமரையின் முனை உடையுமாறும், முத்தும் பொன்னும் தள்ளுபடுமாறும், சங்குகள் புலம்புமாறும், மண்ணில் மீன்கள் துள்ளுமாறும் ஆமைகள் ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உழுபவர்கள் ஆகியோர் அந்நாட்டில் இருந்தனர் என்று இப்பாடலுடன் பொருள் முடிகிறது. இவ்வாறு ஒரு பொருள் பற்றி மூன்றிற்கும் மேலான பாடல்கள் அமைப்பது ‘குளகம்’ என்று கூறப்படும்.

    இன்னும் இப்படலத்தில் நெற் குவியலைக் குவித்து அடையாளமிட்டு பாதுகாத்தது, வறியவருக்கும் ஈந்து பின் விருந்தோடு உண்ண இல்லத்திற்கு நெற் கொண்டு சென்ற மக்கள் செயல், கரும்பை ஆலையிட்டு பிழிந்து சாறாக்கியது, இப்படி பலவற்றைக் காட்டுகிறார் கம்பர். மற்றும் எருமைகள் கன்றை நினைத்த மாத்திரத்திலேயே பால் சுரக்கும் தன்மையைக் காட்டுகிறார். அப்படி பால் வழிந்ததால் வயலில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தனவாம்


கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலில்
கன்று உறங்கும் குரவை கடைசியர்

என்று கொன்றையாலும் மூங்கிலாலும் குழல் செய்து இசைத்தனர் என்பதையும் காட்டுகிறார்.

மேலும் அந்நாட்டில் மக்களுக்கு

கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.

கப்பல்கள் நிறைந்த செல்வத்தை தரும், நிலம் நிறைந்த வளத்தைத் தரும், அதுமட்டுமின்றி சுரங்கம் தோண்டி அரிய மணிகளும் பெறப்பட்டன என்றும் காட்டுகிறார். அப்படிப்பட்ட மக்களின் குலம் அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கொடுத்தது என்றும் காட்டுகிறார். இப்பாடல் சுரக்கும் என்ற சொல் பல முறை வந்து ‘ இடையறாது தரும்’ என்ற ஒருபொருள் தந்ததால் சொற்பொருள் பின்வருநிலை அணி. சுரக்கும் என்று சொன்னதால் தடங்கலில்லாமல் நிறைசெல்வம் மிகுந்து இருந்ததைக் காட்டுகிறது.


இப்படி செல்வமும் ஒழுக்கமும் பெற்றதால் அங்கு


கூற்றம் இல்லையொர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையிற் செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அன்றி இழித்தகவு இல்லையே

என்றும்

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.

என்றும் அந்நாட்டின் சிறப்பைக் காட்டுகிறார். இங்கு சிந்தையின் செம்மையால் சினம் இல்லை என்று காட்டுவது அறிந்து மகிழத்தக்கது. சிந்தை தெளிவானால் சினம் இருக்காதல்லவா!!

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

என்று வள்ளுவனும் காட்டுகிறாரல்லவா!!

இப்படி 61 விருத்தப் பாடல்களில் நாட்டின் அழகை அழகு கவிகளில் காட்டிய கம்பன், மேலும், கவிதையின் இலக்கணத்தை பின்னும் பல இடங்களில் பேசுகிறார். இதோ

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர்

என்று மிகச் சிறப்பாக கவிதைக்கு இலக்கணம் கூறும் அழகை அடுத்து நகரப்படலத்தில் காண்போம்.

விரைவில் மீண்டும் அடுத்தப் பதிவுடன்

அன்புடன் 
உமா

No comments:

Post a Comment