Sunday, March 14, 2021

கம்பன் கவித்தேன் – பாலகாண்டம் – ஆற்றுப்படலம்

          கம்பன் தன் இராமாவதாரத்தை மூல நூலான வால்மீகியின் கதையைத் தழுவியே எழுதினாலும் பல இடங்களில், தமிழ் இலக்கிய மரபை ஒட்டியும், பண்பாட்டை ஒட்டியும் சில மாற்றங்களை புகுத்தியிருப்பார். சில இடங்களில், சற்று மாற்றியும், புதிதாக சிலவற்றைப் படைத்தும், தான் சொல்ல வந்த அறக் கருத்துக்களை  நிலைநிறுத்தும் விதமாகவும், அவற்றிற்கு வலு சேர்க்கும் வகையிலும் தனது காப்பியத்தை எடுத்துச் செல்வார்.

கம்பனின் காவியத்தில் காணப்படும் இம்மாற்றங்கள் எப்படி இக்காப்பியத்திற்கு அழகும் பொருண்மையும் கூட்டுகின்றன என்பதை படித்து அறிந்த அறிஞர்கள் சொல்வழி நாம் படித்துணர்தல் சிறப்பு. உதாரணமாக https://www.youtube.com/watch?v=oWIILIOwdTg என்ற வலையொளித்தளத்தில் சுதாசேஷையன் அவர்களின் உரை, http://www.tamilvu.org/library/nationalized/pdf/30-c.srinivasan/kambanumvalimegium.pdf என்ற தமிழ் இணைய  கல்விக் கழகத்தின் கட்டுரை போன்றவற்றை படித்தறிதல் இன்பம் பயக்கும்.

ஒரு பெருங்காப்பியம் என்றால் நாடு, நகரம், ஆறு ஆகியவற்றை பாடுதல் தமிழ் மரபு. வால்மீகி இராமாயாணத்தில் இப்படலங்கள் இல்லை. தமிழ் மரபையொட்டி ஆறு, நாடு, நகரம் ஆகியவற்றை வர்ணித்து கம்பன் தன் காவியத்தைத் துவங்குகிறார்.

ஆற்றுப்படலம்

ஒரு பெருங்காப்பியத்தின் முதல் படலம், முதல் பாடல். கவி தன் காப்பியத்தின் உட் கருத்தை, அதன் சாரத்தை இதில் சொவதாக நாம் கொள்ளலாமல்லவா. பாடலைப் பார்போம்.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண் எனும்
பூசலம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்.

    குற்றங்கள் இழைக்குன்ற ஐம்பொறிகளாகிய அம்பும், அணிகலன்கள் அணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களின் கண்கள் என்னும் பூசல் அம்பும், ஒழுக்க நெறியினின்று விலகிச் சொல்லாத கோசல நாட்டினை அழகு செய்யும் ஆற்றின் அழகைக்கூறுவோம் என்று துவங்குகிறார்.

இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கம்பன் சோழ நாட்டைச் சேர்ந்தவர். சோழ நாட்டில் தான் இக்காவியம் எழுதப்படுகிறது. கோசலத்தையோ, சரயு நதியையோ கம்பன் கண்டதாக குறிப்பு எதுவுமில்லை. எனவே கம்பன் காட்டுவது சோழ நாடே என்றும் ஆறு என்பது காவிரியே என்றும் கொள்வதில் தவறேதுமில்லை.

ஆற்றை வர்ணிக்க வந்தவர் பொறியடக்கத்தைப் பேசுகிறார் என்றால், அப்படி ஒரு அதிசிறந்த நாட்டை, மக்களை அவர் காண விழைகிறார் எனலாம்.

இங்கு ஐம்பொறிகளை ‘அம்பு’ என்று சொன்னவர், பெண்களின் கண்களை ‘பூசலம்பு’ என்கிறார். போர்த் தொழிலில் வல்ல அம்பு என்கிறார். மனிதனின் பொறிகள் நெறி பிறழ்தல், தனிமனிதனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆனால் பெண்ணின் கண்களாகிய அம்பு பிறரை, ஆண்களை வென்று தன்பாலிழுக்கும் என்பதால் அவை பூசலம்புகள்.

            தனது பொறிகளின் கட்டிலிருந்து தம்மை பாதுகாப்பதைக் காட்டிலும் பெண்களின் கண்களாகிய பொறியிலிருந்து தம்மைக் காத்தல் மிகுந்த கடினம் என்பதால், அத் தன்மையை விளக்கும் விதமாக அடைமொழியிட்டுக் கூறுகிறார்.

            கம்பனின் காவியத்தில் சிறப்பான அம்சம். தாம் விளக்க வந்ததை அழகாக சொற்களில் காட்சிப் படுத்தி, நம் கண்முன்னே விரியச் செய்யும் அழகு.

ஆறு கோசலத்தில் இருப்பதாகக் காட்டிவிட்டார். கோசலம் நமக்கு இப்பொழுது மேலிருந்து ‘பறவை காணும் காட்சி’ போல் தெரிகிறது. Bird’s eye view. 

அடுத்ததாக வானத்தில் வெண்மேகங்கள் உலவுகின்றன. அவை கடலில் நீரை உண்டு கறுத்து மேலெழும்புகின்றன. இதன் நயத்தை நாம் முன்பே கண்டோம். அடுத்து இந்த கறுத்த மேகங்கள் நகர்ந்து மலையினருகில் வந்ததும் தடுக்கப்பட்டு மழையைப் பொழிகின்றன. இப்பொழுது சற்று அருகில் காட்சித் தெரிகிறது. மழைப் பொழியும் அழகு தெரிகிறது. 

மேகங்கள் காற்றினால் நகர்ந்து மலையால் தடுக்கப்பட்டு குளிச்சியால் மலைகளில் மழையைப் பொழிவது, அறிவியல் சார்ந்த இயற்கை நிகழ்வு. கவிக் கம்பனுக்கு இக்காட்சி வேறுவிதமாக தோன்றுகிறது.


பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே

          நதிகள் எல்லாம் கடலில் கலப்பதால், கடல், நதிகளின் கணவன் ஆகிறது.  நதி பிறந்த இடம் மலை என்பதால், மலை' கடலுக்கு மாமனாகிவிட்டதாம்.

  சூரியனின் வெப்பத்தை உணர்ந்த கடல் மலையாகிய மாமன் வெப்பமடைந்து இருப்பான் என்று எண்ணி, மழை நீரால் குளிர்வித்ததாம்.

புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்

இப்பொழுது இன்னும் சற்று அருகில் மழை துளிகள் மலையில் வீழ்வது தெரிகிறது. வானிலிருந்து மழை பொழிவது வெள்ளி இழைப்போல் தெரிகிறது. கம்பனின் கற்பனை விரிகிறது. பொன்மயமான இமயமலையை மேலுகலகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு வெள்ளி இழைகளை வானவர் வீழ்த்தினராம்!! இப்படிச் சொல்லுகிறான் கம்பன். என்னே! அழகு.

இது இயற்கை நிகழ்வின் மேல் கவி தன் கற்பனையை ஏற்றிச் சொல்வதால் தற்குறிப்பேற்ற அணி.

இங்கு லெபனீய கவிஞன் கலீல் ஜிப்ரானின் ஒரு கவிதை ஒப்பு நோக்கத் தக்கது.

Song of the Rain என்ற பாடலில் கலீல் ஜிப்ரான்


I am dotted silver threads dropped from heaven
By the gods. Nature then takes me, to adorn
Her fields and valleys.

என்று மழையின் கூற்றாகச் சொல்லியிருப்பார்.

அடடா, கம்பனைப் படித்திருப்பானோ இக்கவி. அன்றி மேன்மையான கவிகளின் எண்ணம் ஒன்றுபட்டதாய் இருக்குமோ!!

இங்கு கம்பன் ஒரு அறத்தையும் நாமறியச் சொல்லுகிறார்.


உள்ளி யுள்ள எலாமுவந்து ஈயும்அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே

ஏற்போருக்கு எது தேவை என்பதை எண்ணிப் பார்த்து தம்மிடம் உள்ளதனைத்தையும் வாரிவழங்கும் வள்ளலைப் போல் மேகம் கொடுத்ததாம். 

    ஒழுக்கத்திற்குப் பின் ஈகை இங்கு வலியுறுத்தப்படுகிறது. அதுவும் எப்படி? தேவையறிந்து தம்மிடமுள்ளதனைத்தையும் கொடுக்க வேண்டும் என்கிறார்.  இங்கு ஆண்டாளின் ‘ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ என்ற சொற்றொடற் நமக்கு நினைவிற்கு வருகிறதல்லவா!!

    அப்படி வாரி வழங்கிய மேகத்தால் வெள்ளம் பெருகுவது, தனக்கு ஒரு பழிவந்தால் உயிர்வாழா நெறி நின்று, மானம் காத்து, அறவழியில் நாட்டை ஆளும் மன்னனின் புகழ் குறையாமல் பெருகுவதைப்போலவும், தக்கவருக்கு கொடுத்த தானத்தின் பயன் வீழாது ஓங்குவதைப் போலவும் பெருகுகிறது எனக் கூறுகிறார்.

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனுநெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே.

    இதுவரை கடல் நீர் மேகமாகி, கறுத்து, மழையாகி மலையில் பொழிகிறது என்று காட்டிய கம்பர், இன்னும் சற்று அருகில் சென்று இப்பொழுது மழையால் உண்டான நதியின் வெள்ளத்தைப் பார்கிறார். 

     வெள்ளத்தை வர்ணிக்கும் பொழுது கம்பனுக்கு கற்பனை ஊற்றெடுக்கிறது. இக்காப்பியத்தில் இல்லாத இலக்கண கூறுகளே இல்லை என்று கூறும் படியாக தன் கற்பனையால் நிறைத்திருப்பார் கம்பர். இங்கு சிலேடையாக வர்ணித்து நதி வெள்ளத்தைக் காட்டுகிறார்.

மலையின் உச்சியில் பெய்த மழை அதன் அடிவாரத்தை அடையும் அல்லவா? அதுவும் எப்படி? மலையின் பல வளங்களையும் அடித்துக் கொண்டு எடுத்து வருகிறது. அப்ப்டியே சமவெளியில் பாய்கிறது. இது எப்படி இருக்கிறதென்று கம்பன் சிலேடையில் காட்டுகிறார்.

பெரிய தனவந்தரை உச்சி முதல் பாதம் வரைத் தழுவிய விலைமகள் அவரது பொருளையெல்லாம் கவர்ந்து கொண்டு, அவரோடு இல்லாது விலகிவிடுவர். வெள்ளமும் மலையின் உச்சி முதல் அடிவரைத் தழுவி, அதன் வளங்களையெல்லாம் அடித்துக் கொண்டு மலையை விட்டு விலகி சமவெளியில் பாய்கிறது எனவே. நதி வெள்ளம் விலைமகளை ஒத்தது என்கிறார்.


மணியும் பொன்னும் மயில் தழைப்பீலியும்
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்ததுஅவ் வாரியே.

    இப்பாடலில் இன்னும் சற்று அருகில் சென்று காட்டுகிறார். இப்பொழுது என்ன என்ன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன எனத் தெரிகிறது. முத்து, பொன், மயில் பீலி, அழகிய யானைத் தந்தங்கள், சந்தனமரம் எனப் பலபொருட்களுடன் வருவதால் வெள்ளம் வணிகரை ஒத்து இருந்ததாம். உண்மைதானே! வாணிகப் பொருட்களல்லவா இவை.

    அவ்வெள்ளத்தில் பலநிற மலர்களும் பூந்தாதுக்களும் பொன்னும் அடித்து வருவதால் வானவில்லை ஒத்தது எனக் காட்டுகிறார்.


மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலை கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்அந் நீத்தமே

       இப்பாடலில் மலைகளை பெயர்த்து மரங்களை வேருடன் பறித்து பக்கத்திலுள்ள இலை போன்ற பலவற்றையும் எடுத்துக் கடலில் சேர்ப்பதால் கடலில் இராமனுக்கு உதவியாக அணைக்கட்ட வந்த வானரங்களைப் போல் ஆறு இருந்தது என்று பின்னால் நடக்கவிருக்கும் நிகழ்வை இணைத்து காட்டி பாடுகிறார் கம்பர்.

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து
ஊக்க மேமிகுந்து உள்தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின்தீம் புனல்
வாக்கும் தேன்நுகர் மாக்களை மானுமே

இப்பாடலில் குடிகாரரையும் வெள்ளத்தையும் சிலேடையாக்குகிறார். மாக்கள் என்பது தெளிவாற்ற சிந்தனையுள்ளவர்கள். குடிகாரருக்கு சிந்தனைத் தெளிவிருக்காதல்லவா!

இன்னும்


சரயு என்பது தாய்முலை யன்னது இவ்
உரவு நீர்நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம்

குழவிக்கு, பால் நினைந்தூட்டும் தாயைப் போல் ஆறானது வாழும் உயிர்களுக்கெல்லாம் வேண்டுவனவற்றை தானாகத் தருமாம். நீரின்றி அமையாதல்லவா உலகு!


கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம்
நடுக்குறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய்
அடுக்கலின் அளிந்த செந் தேன் அகிலொடு நாறும் அன்றே

தமது சொற்களால் படம்பிடிக்கும் கருவியை நதிக்கு மிக அருகில் எடுத்துச் சொல்கிறார் கம்பர்.இப்பாடலில் ஆற்று வெள்ளத்தின் வாசத்தைக் நாமுணரக் காட்டுகிறார். 

புராணக் கதைகளை உவமையாக்கிப் பாடுவது கவி மரபே.


செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்
உறியோடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே.

இப்பாடலில் கண்ணனின் லீலைகளை ஆற்றின் தன்மைக்கு உவமையாக்கி கம்பர் பாடியிருப்பது நயமிக்கது.

அடுத்த பாடல்களில் வினையின் தன்மையை சிலேடையாக்கிச் சொல்வதும் அறிந்து மகிழத்தக்கது.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆககி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே
.

வெள்ள நீர் சிக்கிய பொருட்களை எல்லாம் தன் போக்கிலேயே அடித்துச் செல்வது, உயிர்களை தன் வயத்திற்கு இயக்கும் வினைப் போன்றதாய் இருந்ததாம்.


காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப்பறை கறங்கக் கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி
நீத்த மாந்தலைய தாகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்த தன்றே.

இப்படி வந்த வெள்ளம் இப்பொழுது வாய்க்கால்களில் பாய்கிறது. ஒரு வாய்க்கால் வழியாக பல கிளை வாய்க்கால்களில் பாய்வது, ஒரு குலம் பலக் கிளைகளாக பிரிவதை போன்றிருந்தது என்கிறார்.


கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே. 19

இப்பாடலில் பல சமயங்கள் காட்டும் கடவுள் நெறியோடு ஒப்பிட்டு தம் சமயக் கருத்தைச் சொல்கிறார் கம்பர்.

வேதங்களாலும் விளக்க முடியாத பரம்பொருள், எவ்வாறு பல சமையங்களாலும் பலவாறு காணப்படுகிறதோ! அவ்வாறே மலையில் தோன்றிய வெள்ளம் ஆறாகி வாய்க்கால் வழியோடி ஏரி, குளம் , குட்டை என்று பல்வேறு வடிவங்களில் திகழ்கிறது எனக் காட்டுகிறார். நதி வெள்ளம் எப்படி ஒன்றுதானோ அவ்வாறே பரம் பொருளும் ஒன்றே என்பது கம்பன் காட்டுவது.


தாதுகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்
போத விழ் பொய்கைதோறும் புதுமணத்தடங்கள்தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர்என உலாய தன்றே

    அவ்வெள்ளம் எப்படி இருந்தது என்றால் வேதங்களால் சொல்லப்பட்ட, உலகின் பல்வேறு உடல்களின் உள்ளும் இருக்கும் ஒரே உயிர் போல், சோலை, செண்பகக் காடு, பொய்கை, தடாகம், வயல்கள் ஆகிய எல்லாவற்றிலும் இருந்தது ஒரே வெள்ள நீர் என்று காட்டுகிறார்.

    பொதுவாக தெரிந்த பொருளை உவமையாக்கி தெரியாததை விளக்குவது உவமையணி. இங்கு காணா பொருளை உவமையாக்கி காட்டுவதன் மூலம் காட்டவந்ததையும் காணாப் பொருளையும் நாமுணரத்தருகிறார் கம்பர்.

    இப்படி கடலில் இருந்து நீர் மேகமாகி மலையில் பொழிந்து, குறிஞ்சி மலையிலிருந்து அருவியாக வீழ்ந்து, ஆறாக முல்லையில் பாய்ந்து மருத நில வாய்க்காலில் நுழைந்து, ஏரி, குளம் குட்டை என்று நிறைந்து பின் மீண்டும் நெய்தல் நிலத்தில் கடலை  அடையும் வெள்ளத்தை தன் சொல்லென்ற கருவியால் காணொளிக் காட்சி போல் நம் கண்முன்னே காட்சிப்படுத்தும் கம்பனின் திறம் அறிந்து மகிழத்தக்கது.

    இப்படலத்தில் ஒழுக்கம், ஈகை, தானம் பொன்ற அறங்களைப் பேசிய கம்பன், விலைமாதர், குடிகாரர் போன்றோரின் இழிநிலையையும் காட்டி மக்கள் வாழ்விற்கு நன்னெறியயைக் காட்டுகிறார். சமயங்களுக்குள் பேதம் பார்ப்பது பேதைமை என்பதையும் காட்டிச் செல்கிறார். இத்தனையும் கலிவிருத்தம் ஆசிரிய விருத்தம் போன்ற பா வகைகளும், உவமை, சிலேடை தற்குறிப்பேற்ற அணிகளும் கொண்ட தமிழின் சிறந்த இலக்கண கட்டுக்குள் நிறைத்து சொல்கிறார். கம்பனின் சொல் பொருள் அழகை இன்னும் இரசிப்போம்.

     அடுத்தப் பகுதியில் நாட்டுப்படலம். இப்படலம், நாட்டின் நிலவளம் , மக்கள் அவர்களின் பண்பு நலன், வாழ்வியல் நெறிகள், வழக்கங்கள், செல்வச் செழிப்பு என பலவற்றையும் காட்டக் கூடியது. அறிவோம் சுவைப்போம்..



அன்புடன்
உமா

2 comments:

  1. அருமை உமா

    வால்மீகி ராமாயணத்தை ஒட்டியே கம்பன் நற்றமிழில் ராம காதையைப் படைத்தாலும், தமிழ் மரபையும் பண்பாட்டையும் ஒற்று சில மாற்றங்களை நுழைத்து காப்பியத்தை மெருகேற்றியிருப்பதை அழகாய் வடித்திருக்கிறாய்.

    இரு பொருள்களை ஒப்புமை படுத்தி பின் இரண்டில் ஒன்று இன்னொன்றை விட சற்று அதிக சிறப்புடையது என்ற வேற்றுமை அணி நம் தமிழின் சிறப்பல்லவா?

    கம்பன் கவிக்கு இச்செய்கை மேலும் ஓர் சிறப்பு

    ReplyDelete