நகரப் படலத்தில் அயோத்தி நகரின் அழகு, பெருமை, அதன் மதிலின் சிறப்பு, அகழியின் தன்மை, சோலை, அந்நகர மக்களின் செல்வச் செழிப்பு ஆகியவற்றை அழகான சித்திரமாக நம்முன்னே காட்டுகிறார் கம்பர். அப்படி காட்டிச் செல்கையில் கம்பன் பல கருத்துக்களையும், அறங்களையும் சொல்லிச் செல்கிறார். காண்போம்.
படலத்துவக்கத்தில் அயோத்தின் பெருமையைக் கூறும் பொழுது, ஒரு நல்ல கவிதையின் இலக்கணத்தை நமக்குக் காட்டுகிறார் கம்பர்.
செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர்
ஒரு கவிதை என்பது செவ்வியதும், இனிமை நிறைந்ததும், சொல்லுகின்ற பொருளால் சிறந்ததும், நுட்பமானதும் சிறந்த சொற்களாலானதுமாக இருக்கவேண்டும் என்பது கம்பன் நமக்கு இங்கு காட்டுவது.
வார்த்தைகளின் குவியல் அல்ல கவிதை. அடுக்குச் சொற்களின் அலங்காரமல்ல கவிதை.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
என வள்ளுவனும் சொல்லவில்லையா! அப்படி மிகச் சிறப்பாக அமைய வேண்டும். சிறந்த சொற்களால் ஆனதாக இருக்க வேண்டும். இலக்கணப்படி சரியானதாக அமைந்தால் மட்டும் போதாது. இனிமையானதாக இருக்க வேண்டும். பொருள் நிறைந்ததாய் இருக்க வேண்டும். அப்பொருளும் மேலானதாக இருக்க வேண்டும், நுட்பமானதாக அமையவேண்டும் என்று காட்டுகிறார் கம்பன்.
இவ்வாறு பல இடங்களில் கவிதையின் கூறுகளை எடுத்துச் சொல்லும் பொழுது, சில இடங்களில் உவமையாகவும் சிலேடையாகவும் கவிதையின் அமைப்பை எடுத்துக் காட்டும் அழகு நயமிக்கது. இதோ!
அன்னமா மதிலுக்கு ஆழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தென அகழி
பொன்விலை மகளிர் மனமெனக் கீழ்ப்போய்ப் புன்கவி எனத்தெளி வின்றிக்
கன்னியர் அல்குல் தடமென யார்க்கும் படிவரும் காப்பின தாகி
நன்னெறி விலக்கும் பொறியென எறியும் கராத்தது நவிலலுற் றதுநாம்
இப்பாடலில் அகழியின் தன்மையைக் காட்ட வந்த கம்பன் அவ்வகழி புன்கவி எனத் தெளிவின்றி இருந்தது என உவமிக்கிறார். தெளிவில்லாமல் இருப்பது சிறந்த கவிதையல்ல. சொல்லிலும் பொருளிலும் தெளிவிருக்கவேண்டும். அப்படி யில்லாமல் இழிவான கவிதைகளைப் போல் இவ்வகழி தெளிவில்லாமல் இருந்ததாம். அகழி கலங்கிய தன்மையை இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். இப்பாடலில் உவமை அழகை இரசித்து மகிழவேண்டும்.
அதே போல், ஆரண்ய காண்டத்தில் கோதாவரியின்பொலிவைக் காட்டும் பொழுதும்
புவியினுக்கு அணி ஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி,
அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி என, கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
இப்பாடல் சிலேடையாக கோதாவரி ஆற்றின் சிறப்பையும் நல்ல சான்றோரின் சிறந்த கவிதையின் இலக்கணத்தையும் காட்டுவதாய் அமைந்திருப்பது அறிந்து மகிழத்தக்கது. சிலேடை என்பது ஒரு பாடல் இரு பொருளுக்கு ஆகி இரண்டு விதமாகவும் பொருள் தருவதாக அமைவது. இப்பாடல் ஆற்றையும் ஒரு நல்ல கவிதையையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
ஆறாக காணும் பொழுது
புவியினுக்கணியாய் : நிலமகளுக்கு ஒரு அணிகலன் போல, ஆற்றொழுக்கை பூமியின் ஆரமாக, மேகலையாக உவமிப்பது கவி மரபு.
ஆன்ற பொருள் தந்து :ஆற்றில் அடித்துவரப்பட்ட அகில், சந்தன மரம், யானை தந்தம், மணிகள் போன்ற பல பொருட்கள் துறைதோரும் தங்கும். அப்படி வளம் தந்து
புலத்திற்று ஆகி : புலம் என்றால் வயல். வயலில் விளையும் பொருட்களுக்கு ஆதாரமாகி,
அவி அகத் துறைகள் தாங்கி: தன்னுள் பலத் துறைகள் கொண்டு
ஐந்திணை நெறி அளாவி : குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்து நிலங்களின் வழி ஓடி
சவி உறத் தெளிந்து : செம்மையாக தெளிவுற்று
தண்ணென் ஒழுக்கமும் தழுவி : குளுமையான நீரோட்டமாக ஓடி
இப்படிக்கிடந்ததாம் கோதாவரி ஆறு என்று காட்டுகிறார் கம்பர்.
சான்றோர் கவியுடன் இதை எப்படி உவமிக்கிறார் என்று பார்ப்போம்.
நல்ல கவிதையாக இப்பாடலைக் காணும் பொழுது:
புவியினுக்கணியாய்: கவிதை என்பது பல அணிகள் கொண்டதாக அமைய வேண்டும். உவமை, உருவகம், வேற்றுப்பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி என்று பல அணிகள் ஒரு கவிதைக்கு அழகு சேர்ப்பன, கவிதை மொழிக்கும், மொழி பேசும் மக்களுக்கும் பெருமை சேர்ப்பது.
ஆன்ற பொருள் தந்து : சிறந்த அறம் சொல்வதாய் அமைந்து
புலத்திற்று ஆகி: இங்கு புலங்களுக்கு விருந்தாகி
அவி அகத் துறைகள் தாங்கி : சிறப்பாக அமைந்த அகத்துறைகள் கொண்டு
ஐந்திணை நெறி அளாவி : குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்திணை ஒழுக்க வழி நின்று
சவி உறத் தெளிந்து: குழப்பமில்லாமல், செம்மையானதாக தெளிவானதாக அமைந்து
தண்ணென் ஒழுக்கமும் தழுவி: நல்லொழுக்கத்தைச் சொல்லி
சான்றோர் கவி :அமைந்திருப்பது நல்ல அறிஞர்களின் கவிதையாகும் என்று காட்டுகிறார்.
இப்படி கோதாவரியின் அழகைக் காட்ட வந்த கம்பர் ஒரு சிறந்த கவிதைக்கான இலக்கணத்தையும் நாமறியக் காட்டுகிறார். கவிதையின் சிறப்பைக்கூறும் பாடலே சிலேடையாக அமைந்து இருப்பது நயமிக்கது. இந்த அனைத்து கூறுகளும் கம்பனின் கவியில் நிறைவுற அமைந்து பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்து நிற்பது அழகு.
அடுத்து நகரப் படலத்தில் அயோத்தி நகரின் அழகை பெருமையை சற்று உயர்வு நவிற்சியாகவே எடுத்துக் காட்டுகிறார் கம்பர்.
அயின் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும் அளகையும் என்றிவை அயனார்
பயிலுற வுற்ற படிபெரும் பான்மை பகர்திரு நகரிது படைப்பான்
மயன்முதற் றெய்வத் தச்சரும் தத்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்
புயல்தொடு குடுமி நெடுநிலை மாடத்து இந்நகர் புகலுமாறு எவனோ.
இந்திரபுரியும் அளகாபுரியும் படைத்தது இந்நகரை படைப்பதற்கான ஒரு பயிற்சியாகவே என்றும்,
உமைக்கொரு பாகத் தொருவனும் இருவர்க்கு ஒருதனிக் கொழுநனும் மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும் உவமை கண்டிலர் அங்கது காண்பான்
அமைப்பருங் காதல் அது பிடித்து உந்த அந்தரம் சந்திரா தித்தர்
இமைப்பிலர் திரிவர் அதுவலால் இதனுக்கு இயம்பலாம் ஏதுமற் றியாதோ.
சந்திரனும் சூரியனும், தேவரும் தினமும் வருவது இந்நகரின் அழகை காண்பதற்காகவே என்றும் சிவனும் திருமாலும் கூட இந்நகரைப் போன்ற ஒன்றை காண்டிலர் என்றும் மிக சிறப்பாக உயர்வு நவிர்சியாக காட்டியிருப்பார். மேலும்
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறைப் பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்.
எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ் ஏழ் உலகு ஆள் இடம்
என்ற பாடலிலும்
தங்கு பேரருளும் தருமமும் துணையாத் தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங்கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப திருவின் வீற்றீருந்தனன் என்றால்,
அங்கண் மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ.
என்றபாடலிலும்
தனது இறைகருத்தையும் காட்டி இந்நகரினை புகழ்ந்து இருப்பார். இங்கு இம்மையில் புண்ணியம் செய்வோர் மறுமையில் சொர்க்கம் சேர்வார்கள் என்பது வேத கருத்து என்றும் கருணையும் அருளும் துணையாக ஐம்புலங்களாகிய பகையை வென்று தவமும் ஞானமும் பெற்று சிறக்கவேண்டும் என்ற அற கருத்துக்களையும் மக்களுக்குச் சொல்லி செல்வார் கம்பர்.
அடுத்து மதிலின் பெருமையை விளக்கும் இடத்தில்
நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி நனிதவ உயர்ந்தன பனிதோய்
மால்வரைக் குலத்தின் யாவையும் இல்லை ஆதலால் உவமைமற் றில்லை
நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நூலவர் உணர்வே
போல் வகைத் தல்லால் உயர்வினொடு உயர்ந்து என்னலாம் பொன் மதில் நிலையே.
இப்பாடலில், அன்று சிற்ப கலை மிகச் சிறந்து இருந்து என்பதை நாமறிகிறோம். இங்கு ஒரு அழகான உவமைமூலம் நல்ல கருத்தையும் சொல்லியிருப்பார். சிற்ப கலை நூல் விதிப்படி நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு அமைந்துள்ள இம்மதிலின் உயர்விற்கு உலகின் எந்த மலையும் உவமைக் கூற முடியாது. எந்த மலையும் மதில் போல் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை மேலும் மதில், மலைகளை விடப் பெரியது. எப்படி எனில், ஞான நூல்களை முற்றும் கற்று, கற்றதோடு மட்டுமல்லாமல் அதன் பயனாக பெற்று உணரக்கூடிய மெய்யுணர்வைப்போல் உயர்ந்தது என்று உயர்வு நவிற்சியாக மெய்யுணர்வை உவமைப்படுத்தி இருப்பது நயமானது. மெய்யுணர்வு என்பது கற்று மட்டும் பெறுவதல்ல, கற்றதன் பயனாக உணரக்கூடியது. இங்கு மதிலை சொல்ல வந்தவர் மெய்யுணர்வையும் நமக்கு தெளிவுறுத்துகிறார்.
மேவரும் உணர்வின் முடிவிலா மையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண்பொறி யடக்கிய செயலால்
காவலிற் கலையூர் கன்னியை யொக்கும் சூலத்தாற் காளியை ஒக்கும்
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும்.
இப்பாடலில் மிகச் சிறப்பாக சிலேடையுடன் கூடிய சில உவமைகளைக் காட்டியிருப்பார். இம்மதில் முடிவில்லாது நீண்டு இருப்பதால் முடிவில்லாத வேதத்தை ஒத்து இருந்ததாம், மிக உயர்ந்து வானுலகை எட்டுவதால் தேவரை ஒத்ததாம், பொறிகளை அடக்கியதால் முனிவரை ஒத்ததாம், இங்கு பொறிகள் என்பது சிலேடையாக போர் கருவிகளையும் ஐம்பொறிகளையும் குறித்து நிற்கும், இதன் மேல் அமைந்துளள இடிதாங்கி சூலத்தைப் போன்றுள்ளதால் காளியைப் போலவும் காவல் செய்வதால் துர்கையைப் போலவும் இருந்ததாம், மேலும் இது பெருமைமிக்க எல்லாவற்றையும் ஒத்திருப்பதாலும் அடைவதற்கு கடினமானதாக இருப்பதாலும் இது ஈசனை ஒத்தும் இருந்ததாம். இப்படி அந்நகருக்கு அணியாக விளங்கிய மதிலை சிறப்பித்துக் கூறுவார். இங்கும் வேதம் ஆதியந்தமில்லாதது, ஐம்பொறிகளை அடக்கியவரே முனிவர், பெருமைமிக்க அனைத்தையும் ஒத்ததாகவும் அடைய முடியாததாகவும் இருப்பதே ஈசன் என்று அறிய முடியாததை உவமிப்பதின் மூலம் இரண்டின் பெருமையையும் உணரவைக்கிறார்.
இப்படி பல பாடல்களில் சிலேடையாக மதிலை சூரிய குல அரசர்களோடு உவமித்துக் காட்டியவர்
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும்
யாணர்
என்று பூணுவதற்கு அணிகலங்களைக் காட்டிலும் புகழே சிறந்து என்று நல்லொழுக்கத்தோடு மக்களைக்காத்தவர் சூரிய குல அரசர்கள் என்று காட்டுவதன் மூலம் ஒழுக்கமும் அதனால் வரும் புகழுமே ஒருவருக்கு அணி என்பதைச் சொல்கிறார்.
அடுத்து மதிலைச் சூழ்ந்த அகழியைக்கூறுவார்.
ஒரு அழகான பாடல்
ஏகுகின்ற தன்க ணங்க ளோடும் எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகல்கி டங்கை நாம வேலை ஆமெனா
மேகம் மொண்டு கொண்டெ ழுந்து விண்தொ டர்ந்த குன்றமென்று
ஆக நொந்து நின்று தாரை அம்மதிற்கண் வீசுமே.
மேகக் கூட்டம், மிகவும் ஆழமானதான அகழியை கடல் என்று எண்ணி மயங்கி நீரை முகந்துக் கொண்டதாம், நீரை முகந்துக் கொண்ட மேகம் மேலே சென்று மிக உயர்ந்த மதிலை மலை என்று மயங்கி அதன் மேல் மழையைப் பொழிந்ததாம். இங்கு மழைப்பொழியும் அறிவியல் நிகழ்வு விவரிக்கப்படுவதோடு, அகழியின் பெருமையையும் மதிலின் உயர்வையும் ஒருசேர நாமுணர சொல்லால் காட்சிபடுத்தியிருப்பதும் அழகு. இது ஒன்றை மற்றொன்றாக நினைத்து மயங்குவதாக காட்டுவதால் இது மயக்கவணி என்பதும் அறியத்தக்கது.
இப்படி அவ்வகழியில் இருக்கும் முதலை, அன்னம், மலர்கள் என்று பலவற்றை சிறப்பாகக் காட்டி நம்முன்னே ஒரு கவிச்ச்சித்திரம் வரைந்து இருப்பார் கம்பர்.
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியை
துன்னி வேறு சூழ்கிடந்த தூங்கு வீங்கு இருட் பிழம்பு
என்னலாம் இறும்பு சூழ்கிடந்த சோலை எண்ணில் அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே.
அழகிய நகர், நகரைச் சுற்றி அமைந்த மதில் , அதனைச்சுற்றி ஆழ்ந்து பரந்து நின்ற அகழி, அடுத்து காடு போல் அடர்ந்த சோலை இவற்றைக்காட்டியவர். அச் சோலையைக் குறிக்கும் போது, சக்கரவாள மலையைச் சுற்றிய இருட்பிழம்பைப்போல் மதிலைச் சுற்றி இருந்த சோலையைப் பார்த்தால் அழகான அம்மதிலுக்கு உடுத்திய ஆடைப்போல் இருந்ததாக தற்குறிப்பேற்றி நயம் படக் காட்டுகிறார்.
சிற்ப கலை மட்டுமல்ல சித்திரக் கலையும் சிறந்து விளங்கியதை அடுத்தப்பாடலில் காட்டுகிறார்.
தா இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால்
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைத்திடா
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே.
ஓவியத்தில் வரையப்பட்டிருந்த பெண்புறாவை உணமைப்புறா என மயங்கிய ஆண் புறா அதனிடத்திலேயே நின்றிருக்க, ஊடல் கொண்ட அதன் பெண்புறா கற்பகச் சோலையில் போய் மறைந்துக் கொண்டதாம். குற்றமற்ற நல்ல தவமுடையவர் தங்கும் கற்பகச் சோலை என்று காட்டியதும் அறியத்தக்கது.
புள்ளியம் புறவுஇறை பொருந்து மாளிகை
தள்ளருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ளருங் கதிரவன் இளவெ யிற்குழாம்
வெள்ளியங் கிரிமிசை விரிந்த போலுமே
கம்பன் அந்நகர மாளிகைகளைக் காட்டும் பொழுது சந்திரனையும் பழிக்கும் வெண்ணிற மாளிகைகள் பாற்கடலைப்போல் இருந்தன எனக்காட்டுகிறார்.
மேற்சொன்னப் பாடலில் அப்படிப்பட்ட வெண்ணிற மாளிகையில் பொன் தகடுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது வெள்ளியங்கிரி எனும் கைலாய மலையின் மீது சிறந்த சூரியனின் கதிர்கள் பரவியிருப்பதை ஒத்து இருந்ததாகக் காட்டுகிறார்.
இங்கு சுந்தரரின் ‘பொன்னார் மேனியனே!’ என்ற தேவாரப்பாடல் நினைவிற்கு வருகிறதல்லவா!!
இன்னுமொரு பாடலில் இம்மாளிகைகளைக் காண வந்தவர் ஆச்சரியத்தால் கண்ணிமைக்காமல் பார்ப்பராம், இவர்கள் மேல் இவ்வொளி பட்டு அவர்களும் கண்ணிமைக்காத தேவரை போலிருப்பார்களாம்.
மேலும் இம் மாளிகையைச் சொல்லும் பொழுது
வானுற நிவந்தன வரம்பு இல் செல்வத்த
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள் தம் கொள்கை சான்றன.
இங்கு எங்கும் பரவியிருக்கும் புகழைப்போல் பரந்து வீசும் ஒளி பொருந்தியவை என்னும் உவமை அழகு அறிந்து மகிழத்தக்கது. அற நெறி தவறாத மன்னனைப் போலவே மக்களும் இருப்பதற்கு இவைச் சான்றாக உள்ளன எனக்காட்டுவதும் அறியத்தக்கது.
மற்றொரு பாடலில் சந்திரன் தினமும் தேய்வது அந்நகரில் உள்ள உயர்ந்த கொடிகளில் உரசுவதால்தான் என்று தற்குறிப்பாக சொல்லும் நயமும் ,
எழுமிடத் தகன்றிடை யொன்றி எல்படு
பொழுதிடைப் போதலிற் புரிசைப் பொன்மதில்
அழன்மணி திருத்திய அயோத்தி யாளுடை
நிழலென பொலியுமால் நேமி வான்சுடர்.
இப்பாடலில் சூரியனுக்கு ஒளி இருக்குமாயின் உதயத்திலேயே ஒளியுடன் உதிக்க வேண்டும், மாலையிலும் சூரியனில் ஒளி மங்குகிறது என்வே சூரியன் இந்நகரின் வழியே செல்வதால் இந்நகரிமிருந்தே ஒளியைப் பெறுகிறான் என்ற கற்பனை நயமும் அழகு. இந்நகரின் அழகை பாடவந்த கம்பருக்கு கற்பனை ஊற்றென பிறந்தது போலும்…
குழலிசை மடந்தையர் குதலை கோதையர்
மழலையங் குழலிசை மகர யாழிசை
எழிலிசை மடந்தையர் இன்சொல் இன்னிசை
பழையர்தம் சேரியிற் பொருநர் பாட்டிசை.
இப்பாடலில் பெண்களை மூன்று நிலைகளில் காட்டி அவர்தம் பேச்சின் இனிமையை மூன்றுவிதமாக காட்டியிருக்கும் அழகு இரசிக்கத்தக்கது.
பொழுதுணர் வரியவப் பொருவின் மாநகர்த்
தொழுதகை மடந்தையர் சுடர்வி ளக்கெனப்
பழுதறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்
எழுதுசித் திரங்களும் இமைப்பி லாதவே.
இப்பாடலிலும் ஒரு அழகான தற்குறிப்பு. ஓவியங்கள் கண்ணிமைக்குமோ! கண்ணிமைக்கவில்லையாம் ஏன் தெரியுமா, இந்நகர பெண்களின் பழுதில்லா மேனியை பார்க்கும் ஆசையால் தான் அவை இமைக்க மறந்தனாவாம். அழகிய கற்பனை!!
பதங்களில் தண்ணுமை பாணி பண்ணுற
விதங்களின் விதிமுறை சதிமி திப்பவர்
மதங்கியர் அச்சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவித் தாள்களே.
இப்பாடலில் நடன கலையின் அழகைக் காட்டுகிறார். தாள ஒலி, மத்தளம், பாடல் ஒலி இவற்றிகேற்ப சதங்கைகள் அணிந்து பெண்கள் ஆடுவர். அவரது சதங்கைகள் போலவே குதிரைகளும் தாளத்துடன் ஆடுமாம்..
முளைப்பன முறுவல் அம்முறுவல் வெந்துயர்
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண்ணிடை இளைப்ப மென்முலை
திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே.
இந்தப்பாடலும் மிகவும் இரசிக்கக்கூடியது. இந்நகர பெண்களின் முகத்தில் எப்பொழுதும் புன்னகை பூத்திருக்குமாம். அதே புன்னகை ஆடவருக்கு வருத்தத்தைக் கொடுக்குமாம். நாளும் இளைப்பது பெண்களின் இடையாம் ஆனால் இவ்விடை மேலும் வருந்துமாறு அவரது முத்தனிந்த மென்முலைகள் திளைத்திருக்குமாம். இப்படி இன்பமும் துன்பமுமாக எதிரெதிராக காட்டியிருப்பது நயமிக்கது. இது உலக இயற்கையுமல்லவா!!
இப்படலம் முழுதும் கம்பனின் பாடல்களில் காணப்படும் கற்பனை வளமும், கருத்தாழமும் கவி நயமும், சொல்லழகும் படிக்கப் படிக்க இன்பமளிக்கக்கூடியது. நமது சிந்தனைக்கு விருந்தாகக் கூடியது. படைப்பாளிகளுக்கு இப்பாடல்கள் ஒரு பொக்கிஷம்.
முத்தாய்ப்பாக படலத்தின் இறுதிப்பாடல் அமைந்திருக்கிறது.
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.
இப்பாடல் ஒரு முற்றுருவகம்
கல்வி என்னும் வித்து முளைத்து, எண்ணற்ற பல நூற் கேள்வியாகிய பல கிளைகள் பெற்று, தவமாகிய இலைகள் துளிர்த்து, அன்பாகிய அரும்பு அரும்பி, அறமாகிய மலர்மலர்ந்து, அறத்தினால் விளைந்த இன்பம் என்னும் பழம் பழுத்த மரத்தைப் போன்று அயோத்தி நகரம் பொலிவாக விளங்கியதாம்.
அடடா! என்னே அழகு! நற்கல்வி, கல்வியால் கேள்வி, தவம் துணையிருக்க, அன்பை அடிப்படியாகக் கொண்டு அறம், அவ்வறத்தால் விளைந்த நல்லின்பம் என்று வாழும் மிகச்சிறப்பான வாழ்வை கம்பன் இப்பாடலில் காட்டுகிறார்.
ஒரு சிறப்பான கவிதையின் தன்மையைச் சொல்லி துவங்கிய இப்படலம் முழுதும் பாடலில் கூறியது போலவே நல்ல கவிதையின் அனைத்துக் கூறுகளும் அமையப்பெற்று சிறந்திருப்பது தமிழால் கம்பன் உயர்வுற்றாரா! கம்பனால் தமிழ் உயர்வுற்றதா! என்று வியக்குமாறு உள்ளது.
‘கம்பன் கவியே கவி’ சுவைப்போம்!!!
அடுத்தப் பதிவு விரைவில்..
அன்புடன்
உமா